ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும், என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இதர பிரிவிற்கு 45 ஆக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பயிற்சி முடித்து வேலையின்றி தவிக்கும் 5 லட்சம் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர் ஓய்வு வயது 58 ஆக இருந்தது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 57 வயது வரை ஆசிரியராகலாம் என்ற நடைமுறை இருந்தது.
ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் பணி நியமன வயது வரம்பும் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அதை குறைத்து நியாயமற்றது. எதிர்காலம் கேள்விக்குறிஆசிரியர் பணிக்கு 2013 முதல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, கல்வியியல் பட்டம் பெற்றோர் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியை எதிர்நோக்கி உள்ளனர்.
தமிழகத்தில் 6 ஆண்டாக ஆசிரியர் பணி நியமனம் இல்லை. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் என அரசு கூறியது பேரதிர்ச்சியாக உள்ளது. வயது வரம்பை குறைத்ததால் 40 வயதை கடந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அனைத்து தகுதி பெற்றிருந்தும் பணி கிடைக்காததற்கு அரசே காரணம். இதனை உணர்ந்து பணி வயது வரம்பு குறைப்பு அரசாணையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment