நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் செய்தியின் உண்மைத் தன்மையை மத்திய அரசின் செய்தி நிறுவனம் விளக்கி உள்ளது.
பொதுத்தேர்வு கிடையாதா?
கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வரும் நிலையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் அறிவித்தார். அதன்படி நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் மே 4ம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதில் ‘புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்ட உடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது நீக்கம் செய்யப்படும்’ என கூறப்பட்டு உள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசின் செய்தி நிறுவனம் (PIB) தற்போது விளக்கம் அளித்துள்ளது.
PIB கூறியதாவது, 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நீக்கப்படும் என்கிற செய்தி முற்றிலும் தவறானது. இது போன்ற ஒரு உத்தரவினை மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பிக்கவில்லை. மேலும் இவ்வாறான தவறான போலி செய்திகளை யாரும் நம்பி பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment