பொதுத்தேர்வின்றி 10ம் வகுப்புக்கு மார்க் எப்படி? - Kalvimurasutn

Latest

Wednesday, March 3, 2021

பொதுத்தேர்வின்றி 10ம் வகுப்புக்கு மார்க் எப்படி?



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு இன்றி மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி என, உரிய விதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், எட்டு மாதங்களுக்குப் பின், ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன.ஆனால், பாடங்களை முடிக்கும் முன், சட்டசபை தேர்தல் வந்து விட்டதால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வின்றி, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்க, பள்ளி கல்வித்துறையை, அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான, வழிகாட்டுதல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.கடந்த கல்வி ஆண்டிலும், 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்தானது. அப்போது, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டில், காலாண்டு, அரையாண்டு தேர்வோ, மாதிரி தேர்வோ நடத்தப்படவில்லை. தற்போது, எந்த தேர்வை வைத்து, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை நிர்ணயிப்பது என, பள்ளிகள் குழப்பம் அடைந்து உள்ளன.அசாதாரண சூழலால் தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளதாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி அளவில் கூட தேர்வை நடத்த முடியாத நிலைஏற்பட்டுள்ளது.


ஒரு வேளை ஒன்பதாம் வகுப்பில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் கணக்கிடலாம் என்றால், அந்த தேர்வை, தற்போதைய கொரோனா பாதிப்பு கால அனுபவங்களுடன் ஒப்பிட முடியாது. சில மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு தான் என, சாதாரணமாக படித்து தேர்வு எழுதியிருப்பர்.அவர்கள், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என, திட்டமிட்டு தயாராகியிருக்கலாம். 

அவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை வழங்க முடியாது.இதுபோன்று பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில், மதிப்பெண்களை நிர்ணயிக்கும் முறையை சரியாக ஆய்வு செய்து அறிவிக்க வேண்டுமென, அரசு தேர்வு துறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment