தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் கருத்து!!
தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடரலாம் என்கிற கவலை அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் விளைவாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கி இருந்த மாணவர்கள், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மார்ச் 22 முதல் 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால், அடுத்த கல்வியாண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தனியார் பள்ளிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அரசுப்பள்ளிகள் இதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், கல்வித்தரம் குறையும் என கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை சரிசெய்ய தனியார் பள்ளிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் அரசுப்பள்ளிகள் தொழில்நுட்ப மேம்பாடு, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment