நர்சரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் கல்வி முறையை மழலையர்க்கு அளிக்கலாம் எனவும் நர்சரி பள்ளி முதல்வர்கள் ஒருமித்து கூறியுள்ளனர். டெல்லியில் 1,700க்கும் அதிகமான நர்சரி பள்ளிகள் உள்ளன. அதில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு நவம்பர் இறுதியில் பொதுவாக வெளியாகும். அதற்கான வழிகாட்டி விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டு, அதன் பிறகு நர்சரி பள்ளிகளில் இருந்து அனைத்து தகவல்களையும் சேகரித்து, டிசம்பரில் விண்ணப்பம் வெளியிடப்படும். இந்த ஆண்டு டிசம்பர் முடிவசையும் தருவாயிலும், நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அரசு மவுனம் சாதித்து வருகிறது. அதாவது, கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தடுப்பூசி கிடைக்காத வரை பள்ளிகள் திறப்பில்லை எனவும் ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது. ஒருவேளை தடுப்பூசி கிடைத்தாலும், நர்சரி பள்ளி மாணவர் சேர்க்கை என்பது மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தொடங்கிய பிறகு தான் இறுதியாக முடிவு எடுக்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘லாக்டவுன் தொடங்கி தற்போது வரை பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் ஆகியுள்ளது. முழு வருடமும் ஆன்லைன் கற்பித்தலும் இளம் மாணவர்களுக்கு சாத்தியமில்லை. எனினும், இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை. பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசித்த பின்னரே அரசு எந்த ஒரு இறுதி முடிவும் எட்டும்’’, எனக் கூறியுள்ளார். சேர்க்கை அறிவிப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது நர்சரி பள்ளி முதல்வர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து ஷாலிமார் பாக் மாடர்ன் ஸ்கூல் முதல்வர், ஸ்ரீராம் ஒன்டர் இயர்ஸ் இயக்குநர், பசிபிக் வேர்ல்டு ஸ்கூல் முதல்வர் உள்பட ஏராளமான பள்ளி முதல்வர்களும் ஒருமித்த கருத்து வெளியிட்டு உள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: நர்சரி சேர்க்கை இல்லை என முடிவு எடுப்பது முறையற்றது.
மழலைச் செல்வங்களின் ஓராண்டு அடிப்படை கல்வி உரிமை பறிக்கப்படுவதாகும். நர்சரி பள்ளிகள் அடிப்படை கல்வி கற்பித்தும், ஆரம்ப பள்ளிகளில் ஆர்வத்துடன் மாணவர்கள் செல்வதற்கு பேருதவியாகவும் அமைகின்றன. கொரோனா பாதிப்பு இருப்பது உண்மை தான். அதுவும் சிறுவர்களை பாதுகாப்பாக கருத வேண்டும் என்பதும் மிகவும் அவசியம். அதே வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் கல்வி முறையில் நர்சரி பள்ளி குழந்தைகளுக்கும் சிறப்பாக கல்வி கற்பிக்க முடியும். இவ்வாறு கோரசாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment