பள்ளிகள் திறப்பு தள்ளி போயுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின், பொது தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட வில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கிய நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, பாடம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.- இதை தொடர்ந்து, பள்ளிகளும் விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக, பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட முடியாமல், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த மார்ச்சில், பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அந்த நேரத்திலும், பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, தேர்தல் முடிந்ததும், ஜூன் மாதம் தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதற்கு, முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், அறிவிப்பு வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துஉள்ளது.
No comments:
Post a Comment