துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 66 பதவிகளுக்கான குரூப் 1, முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதினர். இதனால் ஒரு பதவிக்கு 1,989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதுவதற்காக மாநிலம் முழுவதும் 856 தேர்வு இடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 46,965 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 150 தேர்வு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு கண்காணிப்பு பணியில் 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேர்வு எழுத வந்தவர்களுக்கு கைகளில் சானிடைசர் அடிக்கப்பட்டது. காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகே ஒவ்வொருவரும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு நடைபெற்ற இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 9.15 மணிக்கு முன்னரே தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே போல தேர்வு எழுதியவர்கள் பிற்பகல் 1.15 மணிக்கு முன்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
முதல்நிலை தேர்வில் பொது அறிவியலில் 175 வினா(பட்ட படிப்பு தரத்தில் கேட்கப்பட்டிருந்தது), திறனறிவு தேர்வில் 25 வினா (எஸ்.எஸ்.எல்சி.தரத்தில்) என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை, கோவையில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
இடது கை பெருவிரல் ரேகை கட்டாயம்
முதன் முதலாக நேற்று நடைபெற்ற குரூப்1 தேர்வில் பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதாவது விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் மற்ற நிற மை பேனாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. விடைத்தாளில் உரிய இடங்களில் (2 இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையினை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் E என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் A,B,C,D மற்றும் E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை செய்வதற்காக தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. முறைகேட்டை தடுக்கும் வகையில் இது போன்று புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது.
1.25 லட்சம் பேர் ஆப்சென்ட்
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 51.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment