தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக பூட்டப்பட்டு உள்ள பள்ளிகளை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். இது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் ஜனவரி 8ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 25 கோடி மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அதில் 1.25 கோடி பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 2.11 கோடி பேர் படிக்கின்றனர். ஆரம்ப பள்ளிகளில் 2.38 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளதால் தனியார் பள்ளிகள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை, கல்வி பிரச்சனை, கற்றல் பிரச்சனை மற்றும் உடல் நலப்பிரச்சனை காரணமாக 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் இதுவரை மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களிடம் இருந்து கல்விக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை உள்ளதால், ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் வாகனங்களுக்கு வரி கட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் சார்பாக வழங்கப்படும் 25% ஒதுக்கீடு கட்டணமும் இதுவரை தனியார் பள்ளிகளுக்கு வரவில்லை.
இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதால் தனியார் பள்ளிகளை நிர்வாகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு பள்ளிகளை உடனே திறக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment