9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் பள்ளிக்குக் கட்டாயம் வரவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தேர்ச்சி என்றே அறிவித்துவிட்ட பிறகு பள்ளிக்கு இனி பிள்ளைகளை அனுப்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் மாணவர்கள் தேர்ச்சி குறித்து வெளியிட்ட அறிவிப்பில், ”இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் 9,10 ,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துவிட்டார் முதல்வர். இனி, அந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டுமா? வேண்டாமா? எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாணவர்கள் பள்ளிக்குக் கட்டாயம் வரவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆல் பாஸ் போட்ட பிறகு முந்தைய வகுப்புப் பாடத்தைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்கு அனுப்பினாலும் ஏற்கெனவே பாஸ் போட்டாச்சு, இனி ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என வேறு எங்காவது போக வாய்ப்புள்ளது. சிலர் கடற்கரை, பூங்கா, திரையரங்குகள் எனப் பெற்றோருக்குத் தெரியாமல் பொழுதுபோக்க வாய்ப்புள்ளது.
மேலும், பள்ளிக்கு ஒரு மாணவனை அனுப்புவதற்காக பேருந்து, ரயில், ஆட்டோ, வழிச்செலவு எனப் பயணச் செலவைக் கொடுப்பது பெற்றோருக்குக் கூடுதல் சிரமம். தேர்வைச் சந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் பள்ளி செல்வதற்காக செலவழிக்க மனம் வரும், ஆல் பாஸ் போடப்பட்டபின் மாணவருக்கும் பள்ளிக்குச் செல்ல இயல்பிலேயே மனம் வராது. பிள்ளைகள் பள்ளிக்குத்தான் போவார்களா என்கிற தயக்கம் இருக்கும் என பெற்றோர்கள் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.
மொத்தத்தில் அரசின் ஆல் பாஸ் அறிவிப்பும், அமைச்சரின் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்கிற அறிவிப்பும், பெற்றோரின் தவிப்பும் மீண்டும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment