தேர்வில்லாமல் தேர்ச்சி... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா தமிழக அரசு? - Kalvimurasutn

Latest

Friday, February 26, 2021

தேர்வில்லாமல் தேர்ச்சி... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா தமிழக அரசு?

 


போர் தொடங்கி கொரோனாவரை எந்தப் பேரிடராக இருந்தாலும் முதலில் இலக்காவது குழந்தைகள்தான். ஓராண்டு கடுங்காலம் மாறி, கொரோனா தொற்று வீரியம் குறைந்து ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனாலும் இன்னும் குழந்தைகளைப் பீடித்த இடர் நீங்கவில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் பல லட்சம் அரசுப்பள்ளிக் குழந்தைகள் கற்றல் செயல்பாடே இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் மாதத்தேர்வுகள் முதல், அரையாண்டுத் தேர்வுகள் வரை நடந்து முடிந்துவிட்டன. ஏற்கெனவே அரசுப்பள்ளி-தனியார் பள்ளி பாகுபாடு அதிகரித்துவரும் நிலையில் அரசின் முடிவுகள் கொரோனா காலத்தில் மேலும் குழந்தைகளைப் பாகுபடுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. சோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கென அமைக்கப்பட்ட மருத்துவமுகாம்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. பொதுவிடங்களில் மக்கள் இயல்பாக உலவத் தொடங்கிவிட்டார்கள். டாஸ்மாக் உள்பட எல்லாவற்றிலும் அரசு தளர்வுகளை அறிவித்துவிட்டது. ஆனால் பள்ளிக்கூடங்களில் மட்டும் அரசு இன்னும் தெளிவாக முடிவெடுக்கவில்லை.


கொரோனா தாக்கம் தொடங்கிய காலம் முதலே, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. அவர்களைத் தடுக்காமல், உற்சாகப்படுத்திய அரசு, தங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தலுக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. பெயருக்கு, கல்வித்தொலைக்காட்சி என்ற பெயரில் ஒரு சேனலைத் தொடங்கிவிட்டு கடமையை முடித்துக்கொண்டது. அதை மாணவர்கள் பார்த்தார்களா, அதன்மூலம் அவர்கள் திறன் மேம்பட்டதா என்பதற்கான எந்த ஆய்வுகளும் செய்யப்படவில்லை.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் இப்போதுவரை எந்தவிதமான கல்விச்செயல்பாடுகளுமே இல்லாமல்தான் இருக்கிறார்கள். பள்ளியைத் திறப்பதில் முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சருக்குமே கருத்துகள் வேறுபாடுகள் இருந்தன. மாற்றி மாற்றி அறிவிப்புகள் வெளிவந்தன. ஒரு வழியாக ஜனவரி 19-ம் தேதி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8ம் தேதி 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அடுத்து, 6, 7, 8 வகுப்புகளும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (25.02.2021) சட்டசபையில் 9, 10, 11 வகுப்புகளில் பயின்ற மாணவர்கள், முழுஆண்டுத் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தனியார் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளில் படித்து, தேர்வுகளையும் எழுதியிருக்கிறார்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி தவிர பிற கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படவேயில்லை. கடந்தாண்டு 9ம் வகுப்பு படித்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்குத் தேர்வில்லாமல் தேர்ச்சியளிக்கப்பட்டார்கள். இந்தாண்டு பத்தாம் வகுப்பிலும் தேர்வில்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்காலத்தில் இவர்களின் என்னமாதிரியான சிக்கல்களைச் சந்திப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


"முதல்வரின் தேர்ச்சி அறிவிப்பு பள்ளிக்கல்வியை முற்றிலும் சீரழிக்கும் செயல்" என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"தமிழக அரசு கல்வியைக் கையாளும் முறையே அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை என்று ஒன்று உள்ளது. அவர்கள் தேர்வு நடத்தும் சூழல் இல்லை என்று ஏதேனும் அறிக்கை தந்துள்ளார்களா? எந்த அடிப்படையில் அரசு ஆல் பாஸ் முடிவெடுத்தது?

நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும், அதன்பிறகும் பள்ளிகள் திறப்பது குறித்தும் பாடங்களைக் குறைப்பது குறித்தும் ஆராய்ந்து பரிந்துரைக்க பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு யாரிடம் ஆலோசனை பெற்றது..? என்ன அறிக்கை அளித்தது..? இந்தக் குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இல்லை. ஆனால் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் இருந்தார்கள். அவர்களின் பரிந்துரைகள் என்ன என்பதுகூட வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

ஜனவரி 19ல் பள்ளியைத் திறக்கச் சொன்னார்கள். ஒரு மாதம் முடிந்துவிட்டது. தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை வசூலித்து முடித்து விட்டன. அந்த வேலை முடிந்ததும் 'ஆல் பாஸ்' அறிவித்துவிட்டார்கள்.

கடந்த ஓராண்டாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள் குழந்தைகள். மொபைல், டிவி பார்த்து கண்கள் பாதிக்கப்படுகின்றன; உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் பெற்றோர் சொல்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் வகுப்பறையில்தான் சிறப்பான கற்றல் செயல்பாடு நடக்கும்.

எல்லாவற்றையும் திறந்துவிட்டபிறகு பள்ளிக்கூடத்தை மட்டும் திறக்காமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. திறந்தால் பாதிப்பு வரும் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதையும் சேர்த்து வெளியிட்டிருக்க வேண்டும் அரசு. ஐந்து மாதங்கள் பள்ளியை நடத்தி ஜூன் மத்தியில் தேர்வு நடத்தலாம். அதற்கடுத்த பத்து நாள்களில் ரிசல்ட் கொடுத்துவிடலாம். குழந்தைகள் ஒரளவுக்கு மனரீதியாக தேறிவிடுவார்கள்.

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை - 2020 பள்ளிக்கல்வியை செல்லாக்காசாக மாற்றுகிறது. அந்தக் கொள்கையின்படி, பள்ளிக்கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான திறனை வளர்க்கும். அவ்வளவுதான்! பள்ளிக்கல்வி சான்றுகளை வைத்து கல்லூரிக்குப் போகமுடியாது. தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் பெறும் சான்றிதழ்களைக் கொண்டுதான் கல்லூரிகளில் சேரமுடியும். பள்ளிக்கூடங்களில் கல்வியியல் செயல்பாடு நடக்காது. கூலித் தொழிலாளர்களைத்தான் அவை உருவாக்கும். அதற்கு அடியெடுத்துக் கொடுக்கும் வகையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு" என்று குற்றம் சாட்டுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆல் பாஸ் அறிவிப்புக்கு இப்போது என்ன தேவை என்பதுதான் கல்வியாளர்களின் கேள்வி. பள்ளிகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கிவிட்டன. அடுத்த சில மாதங்களில் முடிந்தளவுக்கு பாடங்கள் நடத்தி, தேர்வு வைத்து, ஒருவேளை மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால் தேர்வை ரத்து செய்யலாம். அதற்குள் ஏன் இந்த முடிவு என்பதுதான் இப்போது எழுப்பப்படும் கேள்வி.

இதே கேள்வியைத்தான் தனியார் பள்ளி நிர்வாகிகளும் எழுப்புகிறார்கள்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் அரசின் முடிவுபற்றி ஆதங்கமாகப் பேசுகிறார்.


"தேர்வு என்பது பள்ளிக்கல்வி செயல்பாட்டில் ஒரு முக்கியச் செயல்பாடு. அதைக் குலைப்பது மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எந்த அடிப்படையில் உயர்படிப்புகளுக்கான குரூப்பைத் தேர்வு செய்வார்கள்? பத்தாம் வகுப்பு தேர்ச்சியை வைத்து அஞ்சல் துறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்கள் எப்படி இந்தத் தேர்ச்சியைப் பயன்படுத்துவார்கள்? சிபிஎஸ்இ-யில் தேர்வு உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த மாணவர்களோடு நம் மாணவர்கள் எப்படிப் போட்டியிடுவார்கள்? இறுதித் தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆல் பாஸ் என்று அறிவிப்பதாக இருந்தால் பிறகெதற்கு தேர்வுக்கட்டணம் வாங்கினார்கள்.

இன்று காலை பத்திரிகைகளில் வந்த செய்தியில் 'விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்' என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மதியம், 'தேர்வில்லாமல் ஆல்பாஸ்' என்று முதல்வர் அறிவிக்கிறார். என்றால் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சரவைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. 10.52 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். இந்த மாணவர்களின் எதிர்காலம் சார்ந்து முடிவெடுக்கும்போது துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும்... கண்டிப்பாக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்கிறார் ஸ்ரீதர்.


மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா அரசு? ஏன் இந்த அவசரக்கோல முடிவு?


முன்னாள் கல்வியமைச்சரும் அ.தி.மு.க தகவல் தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வனிடம் கேட்டேன்.


"கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டாவது அலை வரும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அதைத்தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பெரும்பகுதி பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை விரும்பவில்லை. அதனால் 9, 10, 11 மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் பேரிடர் நேரம் என்பதால் பள்ளிக்கு வரும் முடிவை பெற்றோரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நிறைய பெற்றோர் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பவில்லை. இந்த நிலையில் எப்படித் தேர்வு நடத்தி திறனைத் தீர்மானிக்க முடியும்? சிபிஎஸ்சி, தனியார் பள்ளிகளில் படிக்கும் நகர்ப்புற மாணவர்கள் ஓரளவுக்குத் தேர்வுக்குத் தயாராகிவிடுவார்கள். ஆனால் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள நிலை கேள்விக்குறியாகிவிடும். சமத்துவமும் சமூக நீதியும் பாதிக்கும். பாகுபாடு பெரிதாகிவிடும்.பிப்ரவரி முடிந்துவிட்டது. மார்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். ஏப்ரல்வரை தேர்தல் வேலைகள் நடக்கும். மே மாதம் பள்ளித் தேர்வுகளை நடத்தினால் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வை சந்திக்கும் மனநிலையில் இருப்பார்களா? இதையெல்லாம் ஆராய்ந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக முடிவெடுப்பதாகச் சொல்லப்படுவது ஆதாரமற்றது. கொரோனா என்பது இதுவரை யாரும் எதிர்கொண்டிராத பேரிடர். இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் போகவில்லை. கொரோனாவால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதிப்பைத்தான் நாமும் எதிர்கொண்டுள்ளோம். இந்தச் சூழல் மாறும். இப்போதுதான் தடுப்பூசி வந்திருக்கிறது. முழுமையாக கொரோனாவை தாண்டி இயல்பு வாழ்க்கை திரும்பும். அதுவரை அரசின் நெருக்கடியைப் புரிந்துகொள்ளவேண்டும்..." என்கிறார் வைகைச்செல்வன்.

தேசத்தின் எதிர்காலம் மாணவர்கள்தான். கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தறிந்து தீர்க்கமாக எடுக்க வேண்டும். கொரோனா கடந்து போய்விடும். ஆனால் தவறான முடிவுகள் வரலாறாய் படிந்துவிடும்!


- வெ.நீலகண்டன் விகடன் இதழ்

No comments:

Post a Comment