அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இறுதி பருவத்தைத் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்தது தமிழக அரசு. அதேபோல, அரியர் வைத்து அதற்கான தேர்வை எழுதி கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அரியர் தேர்வுகளை 8 வாரத்துக்குள் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோலவே பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் கடந்த 2001 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் இறுதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்- செப்டம்பர் 2021, பிப்ரவரி 2022, ஆகஸ்ட் 2022 ஆகிய மூன்று செமஸ்டர்களில் தேர்வு எழுதலாம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி அடைந்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment