அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - குவியும் பாராட்டு - Kalvimurasutn

Latest

Tuesday, October 27, 2020

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - குவியும் பாராட்டு

 சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. இந்த நல்ல மாற்றத்திற்கு, பொதுமக்கள், கல்வியாளர்களிடையே வரவேற்பும் பாராட்டு குவிந்து வருகிறது. 

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை, இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. காலணி முதல் சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு, கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, மடிக்கணினி வரை அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இருப்பினும், ஆங்கிலக்கல்வி மோகத்தாலும், தரமான கல்வியை எதிர்பார்த்தும், கூலித் தொழிலாளர்கள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரும், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல், அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, தரமான கல்வி அளிப்பதாக கூறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது, கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையேயும், இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால்தான், கல்வித்தரம் மேலும் உயரும் என பரவலாக கல்வியாளர்கள் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.

நீண்ட நாள்களாக நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கற்பிப்பதை மெய்பிக்கும் வகையிலும், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பணிபுரியும் ஆசிரிய- ஆசிரியைகள், தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசன்குட்டை ஊராட்சி ஒன்றீய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் சு.ராஜசேகரன், அவரது மகன் ஆரவமுதனை குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிப்பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்த்துள்ளார்.

சிங்கிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் உமா- முதுகலை ஆசிரியர் டான்போஸ்கோ தம்பதியர், தனது மகள் மெர்சலினை அதே பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார், 

வட்டார வள மையத்தில் ஆசிரிய பயிற்றுநராக பணிபுரிந்து வரும் ஆசிரியை பரமேஸ்வரி மகன் சிங்கிபுரம் அரசுப்பள்ளியில் ஏழாம வகுப்பில் படித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து, வாழப்பாடி பகுதி அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஏராளமான ஆசிரிய-ஆசிரியைகள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கு முன்வந்துள்ளனர்.

இந்த நல்ல முன்னெடுப்பு மாற்றத்திற்கு, வாழப்பாடி பகுதியில் கல்வியாளர்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அரசன்குட்டை அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.ராஜசேகரன் கூறியதாவது: 

நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். அரசுப்பள்ளிகளில் புதிய தலைமுறை ஆசிரியர்கள் போட்டீப்போட்டுக்கொண்டு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் அனைத்து கலை, விளையாட்டு திறன் வளர்ப்பதோடு, தரமான கல்வி கற்பித்து வருகிறோம்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், எனது மகன் ஆரவமுதனை, வாழப்பாடி அருகே குறிச்சியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்த்துள்ளேன்.

தனியார் பள்ளிகளை விட, எனது மகனுக்கு அரசுப்பள்ளியில் தரமான கல்வி கிடைக்குமென எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.



No comments:

Post a Comment