தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார். கல்லூரிகள் வாரத்துக்கு 6 நாட்கள் மட்டும் செயல்பட வேண்டும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ள மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்கக் கூடாது, 50 சதவிகித மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும், கூட்டம் கூடுவதைத் தவிர்த்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம், மற்றவர்கள் ஆன்லைனில் கற்றலைத் தொடரலாம். விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment