கட்டாய கல்வி உரிமைச் சட்டம்; மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம்: உயர்த்தி தரக்கோரி தனியார் பள்ளிகள் வழக்கு - Kalvimurasutn

Latest

Wednesday, December 9, 2020

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்; மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம்: உயர்த்தி தரக்கோரி தனியார் பள்ளிகள் வழக்கு

தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் பயிலும் மாணவர்களுக்கான கட்டணமாக அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம்.




கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்கும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ அத்தொகையை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என இந்த சட்டப்பிரிவு தெரிவிக்கிறது.

இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க கோரி சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் நிலையில், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை கணக்கிட்டு, தனியார் பள்ளிகளுக்கு குறைந்த கட்டணத்தை வழங்குவது தன்னிச்சையானது.

தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் பயிலும் மாணவர்களுக்கான கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண அளவுக்கே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய - மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment