10,12 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடங்கின. - Kalvimurasutn

Latest

Thursday, January 28, 2021

10,12 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடங்கின.



 தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வியாண்டு தாமதத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 35 முதல் 40சதவீதம் வரை தமிழக அரசு குறைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட, பள்ளிக்கல்வியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் வினா வங்கி புத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. இதை முழுமையாக படித்தால் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறமுடியும். அதன்படி நடப்பாண்டு அனைத்து பாடங்களுக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்கியுள்ளது. மார்ச் இறுதிக்குள் புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மறுபுறம் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை முடுக்கிவிட்டுள்ளது. முதல்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;

கடந்தாண்டு மார்ச் மாதம்நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்போது 12-ம் வகுப்புதேர்வுக்கான மாணவ, மாணவிகளின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமை ஆசிரியர்கள் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பிப்.5-ம் தேதிக்குள் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment