பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு - Kalvimurasutn

Latest

Saturday, January 30, 2021

பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு

 பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வகுப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 19-ந் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்புக்கு 25 பேர் வீதம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதேபோல ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றி வகுப்புகளை நடத்துகின்றனர். பள்ளி திறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. தொற்று பரவல் பெரிய அளவில் இல்லை. ஒருசில இடங்களில் மட்டும் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வகுப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. கூடுதலாக மாணவர்களை அனுமதிக்கும்போது அதற்கு தேவையான அறைகள் உள்ளதா? போதிய காற்றோட்ட வசதி உள்ளதா? என ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பு அறைகளை தயார் செய்ய வேண்டும். போதிய இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க வேண்டும். தற்போது உள்ள வழி காட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிடாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.

தனியார் பள்ளிகள் 9, 11-ம் வகுப்பு மாணவர்களை அனுமதிக்க தேவையான பாதுகாப்பு அம்சங்களை இப்போதே மேற்கொள்ள தொடங்கிவிட்டன.

பள்ளி முழுவதும் வகுப்பு முடிந்தவுடன் கிருமி நாசினி தெளித்தல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், வளாகங்களில் மாணவர்கள் சுற்றுவதை தடுத்தல் போன்ற கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment