மத்திய அரசு, பிப்.28 வரை ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புகுறைந்து வரும் நிலையில், பலகட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அரசு வெளியிட்ட அறிவிப்பில் 12 வது கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், ஜன.31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, ஊரடங்கு வரும்31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே ஊரடங்கை, வரும் பிப்.28-ம் தேதி வரைநீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கரோனா சிகிச்சை குறித்து முதல்வர் பழனிசாமி இன்றுஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் முதல்வர்பழனிசாமி, 10.30 மணிக்கு தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலில் மாவட்ட ஆட்சியர்களுடன், கரோனா தடுப்பு பணிகள், பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் கரோனா தடுப்பு சிகிச்சை முறைகள், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, ஜன.30 அல்லது 31-ம் தேதிகளில் அடுத்தக் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment