இன்று நடைபெறும் தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூரில் ரூ.43 கோடி மதிப்பிலான புதிய கட்டிட பணிகள், சாலை பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
2017- 18ம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படாது. அதே நேரத்தில் மத்திய அரசு நிதி உதவியோடு 6 முதல் 8ம் வகுப்பு வரை டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்க இதுவரை ஆய்வு நடக்கவில்லை. அதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து முடிவெடுக்கப்படும்.
நீட்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் கிடைத்த பிறகு தான் முடிவு செய்யப்படும்.
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.தற்போதைய சூழ்நிலையில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டாலும் 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
சிறப்பு ஆசிரியர்களுக்கு மத்தியஅரசு மாதம் ரூ.5,500 மட்டுமே வழங்குகிறது. ஆனால் தமிழகஅரசு மனிதாபிமானத்தோடு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. உடற்பயிற்சி ஆசிரியர், காலி பணியிடங்களுக்கு ஏற்ப நிரப்பபட்டு வருகிறது. மற்ற ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment