கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.. தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பல மாநிலங்கள் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. அந்த வகையில் தமிழகத்திலும் 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வு நடத்தாமலேயே, ஆல் பாஸ் வழங்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன் தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.. இதே போல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளும் அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் ஆகியவற்றுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 6,7,8 வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்பு தான், 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே விரைவில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் 9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் 98.5% பள்ளிக்கு வருகை தருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment