9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் தீவிரம். - Kalvimurasutn

Latest

Monday, February 8, 2021

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்.

 பத்தரை மாதங்களுக்குப் பிறகு 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகப் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி மூடப்பட்டன. எதிர்பாராத தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.


கரோனா பாதிப்பு குறைவு

கரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவந்த நிலையில், பொதுத் தேர்வை எழுத உள்ள 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரசின் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


ஓர் அறையில் 25 பேர்

அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக் கவசம் அணிந்துதான் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஓர் அறையில் அதிகபட்சம் 25 பேர் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 8-ம் தேதி (இன்று) முதல்வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது.


பெற்றோரின் அனுமதிக் கடிதம்

அதன்படி, பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (திங்கள் கிழமை) வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரின் அனுமதி கடிதத்தைக் கட்டாயம் பெற வேண்டும் என்று அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் தொடங்கிய இரண்டு நாட்களுக்கு உளவியல் ஆலோசனை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment