தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பிரச்சினையால் அரசுப் பள்ளியில் முழுமையாகப் படித்த மாணவர் மணிகண்டன் நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டின் கீழ் வரும் புராணசிங்குபாளையம் கிராமத்தில் பாதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும், மற்ற பாதி தமிழ்நாட்டிற்கும் சொந்தமானது. இங்கு குடிசை வீட்டில் வசித்து வருபவர் ஆர்.மணிகண்டன். இவர் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை புராணசிங்குபாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புராணசிங்கு பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு எழுதினார்.
கூலித்தொழிலாளியின் மகனான மணிகண்டன் எந்தவொரு வெளிப் பயிற்சியும் எடுக்காமல் கடந்த 2019-ம் ஆண்டில் நீட் தேர்வில் 170 மதிப்பெண்கள் எடுத்தார். தொடர்ந்து படித்து, 2020-ல் 500 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 86,541-வது இடத்தைப் பிடித்தார்.
இவர் தமிழகப் பகுதிக்குள் வருபவர் என்பதால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்காகத் தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். ஆனால் அவர் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் கல்வியை முடித்ததால் அவரது விண்ணப்பத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது.
தமிழகத்தில் பிற மாநில மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் அரசுப் பள்ளியில் தொடர்ந்து படித்தால், அவர்கள் தமிழகக் குடியுரிமை பெற்று பொதுப்பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே விதிமுறைகள் புதுச்சேரி அரசில் இருந்தாலும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க புதுச்சேரி அரசிடம் விதிமுறை இல்லை. எனவே அவர் புதுச்சேரி அரசின் மூலம் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்காக சென்டாக்குக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை.
இது தொடர்பாக மணிகண்டனின் வகுப்பு ஆசிரியர் ஸ்ரீ. ஸ்ரீராம் கூறும்போது, "கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் மகனான மணிகண்டன் நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக தமிழக, புதுச்சேரி அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.
தமிழகத்தைப் பின்பற்றிப் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென்று சிறப்பு உள் ஒதுக்கீடு குறித்துத் தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில், மாணவரின் நிலையைக் கருத்தில்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசுப் பள்ளியில் முழுவதும் படித்த காரணத்தால் குடியுரிமை விதிகளில் சிறப்புத் திருத்தம் செய்து புதுச்சேரி குடியுரிமை வழங்கி சென்டாக் மருத்துவ விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளப் புதுச்சேரி அரசு ஆவன செய்யவேண்டும்.
புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்தாலும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசுப் பாடப் புத்தகத்தைத்தான் படித்தார். தமிழக அரசின் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழக அரசு நடத்திய பொதுத்தேர்வினை எழுதி தமிழக மாணவர்களைப்போல் தேசிய நுழைவு தேர்வான நீட்டில் 500 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழகக் குடியுரிமை பெற்றுள்ள எங்களது மாணவரை தமிழக அரசுப் பள்ளியில் படித்ததாகக் கருதி உள் ஒதுக்கீடு முறையில் மருத்துவப் படிப்பிற்கு தமிழக அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.
இரண்டு அரசுகளுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கே சிறப்பாக உதவ வேண்டும் என்ற கொள்கையோடு உள்ளதால் இந்த மாணவருக்காக விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்படும் பட்சத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய உந்துதலாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment