2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2018 ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழக்கம் போல் வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். காரணம் கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வோ அல்லது முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வோ தமிழகத்தில் நடைபெறவில்லை.
அமைச்சரின் அறிவிப்பு அர்த்தமற்று உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து , 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில் , 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஏழாண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் . இரண்டாண்டுகளுக்கு முன் பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்கப்படும் என கூறினார். ஆனால் இது வரை எந்த பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை. இதை தவிர இவர் அறிவித்த பல அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் , தற்போது 2018ம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஓரிரு நாளில் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது கேலிகூத்தாக உள்ளது. ஏனென்றால் 2018ம் ஆண்டு ஆசிரியர் தகு தித்தேர்வோ நடத்தப்பட வில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார் .
No comments:
Post a Comment