பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காராப்பாடி, பொலவாபாளையம் ஊராட்சிகளில் பேவர் பிளாக் தளம், வடிகால் வசதி, கான்க்ரீட் தளம் அமைக்கும் பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.
120 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கியதுடன் சவாக்காட்டுப்பாளையத்தில் அம்மா கிளினிக்கையும் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறக்காத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
கொரோனா சூழலால் தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால் இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் ஐயம் உள்ளது. பள்ளிகள் திறக்காத நிலையில், அந்தந்த வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகளை அடையாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றினால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
அதன்படி இந்தக் கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.
அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.
No comments:
Post a Comment