பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் +2 மாணவர்களுக்கு இனி தினமும் தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு மே 3ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் நோய் பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது .
பொதுத்தேர்வுக்கு தேவையான முக்கிய வினாக்கள் , பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து , தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் , பயிற்சி அளிப்பது முக்கிய தேவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும் வினாக்கள் தேர்வு செய்து, அதை தினசரி தேர்வாக நடத்த வேண்டும் என்றும், தேர்வு வினாத்தாள் தினமும், முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குரூப்பிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை எடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைனில் பகிர்ந்து, தினமும் தேர்வு எழுத வைத்து, விடைத்தாள்களை பெற வேண்டும். அவற்றை அன்றே திருத்தி, மதிப்பெண் விபரத்தை, மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அந்த மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, கூடுதல் பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment