தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு – எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!!
தமிழகத்தில் புதிய கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளில் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. இதனால் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆன்லைன் வகுப்பு, வாட்ஸ்ஆப் பாடங்கள், கல்வி தொலைக்காட்சி என பல்வேறு முறைகளில் பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்ததோ, இல்லையோ பெற்றோர்களுக்கு சுமை அதிகரித்தது என்றே கூறலாம். வசதி குறைந்த அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், கேபிள் வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர இயலவில்லை.
சில மாணவர்களும் குடும்ப வறுமையை போக்குவதற்காக வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது. எனவே இடைநின்ற மாணவர்களின் விபரங்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து உள்ளதால் 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. புதிய கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையிலி பாடங்கள் நடத்தப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென உயர்ந்து வரும் நோய்த்தொற்றின் காரணமாக அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இது பெற்றோர்களுக்கு ஏமாற்றமே.
இதனால் அடுத்த கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அவர்களின் கற்றல் திறன் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் சுழற்சி முறையில் நேரடி பாடங்களை கற்பிக்க தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment