தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு - தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை - Kalvimurasutn

Latest

Monday, October 26, 2020

தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு - தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை

தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

'''தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததைத் தமிழகத்தில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தற்போதுள்ள அரசாணைக்கு ஆளுநர் ஒப்புதல் ஆணை பிறப்பிக்க கூடாது என்ற எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.

தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து முடிந்த கூட்டத்தொடரில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து, அதை அரசாணையாக ஆளுநரிடம் எழுதிக் கையொப்பமிட்டு அரசாணை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பயின்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை இயற்ற வேண்டும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைக்கக்கூடிய வேலையைச் செய்வது தவறு. குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபின் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வெறும் 180 பேர் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அரசுப் பள்ளியில் இனி எப்படிக் கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திட வேண்டும்.

தரமான மாணவர்களால்தான் தகுதியான மருத்துவர்களாக முடியும் என்பதை உணர்ந்து அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டால் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்றுத் தமிழகத் தனியார் பள்ளி மாணவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றோம்''.

இவ்வாறு நந்தகுமார் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment