ஹீரோவான தலைமை ஆசிரியர்:பணியிடமாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியரை தோளில் தூக்கி வைத்து ஆடல், பாடல்களுடன் உற்சாக நடனமாடி வழியனுப்பிய மக்கள் - Kalvimurasutn

Latest

Thursday, February 4, 2021

ஹீரோவான தலைமை ஆசிரியர்:பணியிடமாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியரை தோளில் தூக்கி வைத்து ஆடல், பாடல்களுடன் உற்சாக நடனமாடி வழியனுப்பிய மக்கள்

 


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ளது தான் மல்லுகுடா என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத பட்சத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக நரேந்திரா என்பவர் பொறுப்பெற்றுள்ளார்.

இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறைகள் இல்லாததை பார்த்த நரேந்திரா அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி பள்ளியை சீரமைத்துள்ளார்.

மல்லுகுடா கிராமத்தில் ஆதிவாசிகள் அதிகம் வசித்து வருவதால் அந்த இனத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியை போதிப்பதில் நரேந்திர மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, சமுதாயத்தில் அவர்களும் முன்னேற அறிவுரை வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளை நரேந்திரா எடுத்துள்ளார். நாளடைவில் ஆசிரியர் பணியை சேவையாக கருதி செய்து வரும் நரேந்திரா ஆதிவாசி மக்களின் அன்பை பெற்றார்.

மல்லுகுடா கிராம பள்ளிக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் நரேந்திராவிற்கு விஜயநகரத்திற்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. இதனை கிராம மக்களிடையே தெரிவிக்கவே, இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு கல்வி அறிவை போதித்த நரேந்திராவுக்கு விழா எடுத்து வழியனுப்பி வைக்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர்.

தங்களது ஆதிவாசி சமுதாய முறைப்படி விழா எடுத்த கிராம மக்கள் அவரை தோளில் சுமந்து வீதியெங்கும் வலம் வந்து ஆடல், பாடலுடன் பாதப்பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். கல்வியை மட்டும் போதித்த தனக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளித்த மரியாதையையும், நன்றியையும் பார்த்த நரேந்திரா நெகிழ்ந்தார் என்றே கூறலாம்.

கல்வியை போதிப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென்ற ஆதிவாசி மக்களின் இந்த சம்பிரதாயம் பிறருக்கு எடுத்துக்காட்டாகவே உள்ளது.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் - உலக சாதனை முயற்சி



No comments:

Post a Comment