ஐஐடி கேட் 2021 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் 2021- 22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு நாளை (பிப்ரவரி 5) தொடங்குகிறது. தொடர்ந்து பிப்.6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாகத் தேர்வுகள் நடக்க உள்ளன.
சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்துகிறது.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும்.
தேர்வரின் உடல் வெப்பநிலை 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருந்தால் தேர்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, தேர்வை எழுத வேண்டும். முகக்கவசம், கையுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்வர்கள், தங்களுடன் சொந்தமாக சானிடைசர் பாட்டிலை எடுத்துவர வேண்டும், அனைத்து நேரங்களிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment