தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கோவை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25,000/- ஊக்கத் தொகையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
மதுக்கரை, குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (29.11.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கோவை மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான ஊக்கத் தொகையினை அப்போது வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
''மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசு மூலமாக அந்தந்தப் பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் சதவிகிதம் ஒவ்வோராண்டும் உயர்ந்து வருகிறது.
மேலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தற்போது முதல்வர் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இதன்படி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் மொத்தம் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் என 3,650 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி, நடப்பாண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் முன்னுரிமை அடிப்படையின் கீழ், எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 21 மாணவ - மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணாக்கர்கள், கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் உள்ள சிரமத்தினைக் குறைக்க, அவர்களின் கல்விக் கட்டணங்கள், விடுதிக் கட்டணங்கள் செலுத்தும் விதமாக தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியினை உருவாக்கி அந்நிதியில் இருந்து மாணக்கர்களுக்கான கல்விக் கட்டணங்கள் மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே நேரடியாக கல்லூரிகளுக்குச் செலுத்தும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணங்களை தமிழ்நாடு அரசே ஏற்கிறது.
மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் நன்றாகப் படித்து வருங்காலத்தில் சிறந்த மருத்துவராக விளங்கி நம் மாவட்டத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், மாவட்டக் கல்வி அலுவலர் உஷா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment