கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,000 கோடி மதிப்புள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடையப் போகிறார்கள் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் இன்று எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டதை கேட்டதும் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் இன்னல்
வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.
எனவே அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடன் பெறும் நடைமுறை
அதே நேரம் கணிசமான விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பில் சில சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது. தங்களிடம் உள்ள விவசாய நிலத்தை காட்டி தான் விவசாய கடனை கூட்டுறவு சங்கத்தில் பெற முடியும். கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் பெற்று அதை கூட்டுறவு சங்கத்தில் கொடுத்து கடன் பெறுகிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகளிடம் குழப்பம்
இந்த விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பட்டா, சிட்டா, கொடுத்து நகையை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கும் இந்த கடன் தள்ளுபடி சலுகை பொருந்துமா என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.
நகைக் கடன்
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் நகைக்கடன் தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. மேலும், பட்டா, சிட்டா அடங்கல் போன்றவற்றை பயிர் கடன் என்று சொல்வது கிடையாது. பயிர் வகைகளை பொறுத்துதான் ஒவ்வொரு ஏக்கருக்கும் இவ்வளவு என்று நிர்ணயம் செய்து, கடன் வழங்கப்படுகிறது. இதுதான் விவசாய கடன். எனவே நகையை அடமானம் வைத்து பெறுவது விவசாய கடன் பிரிவில் வராது. விவசாயத்துக்கு என்று, பட்டா, சிட்டா, சிறு குறு விவசாயி என்று சான்று கொடுத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன் மட்டும்தான் விவசாய கடன் பிரிவில் வரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் சிவப்பு அரிசி இன்னும் பல நன்மைகள் உள்ளன.
கடன் தள்ளுபடி பெறுவது எப்படி?
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி சலுகை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் பரவலாக விவசாயிகளிடம் எழுகிறது. கடன் வாங்கிய விவசாயிகள் இதற்கு எந்த ஒரு நடைமுறையும் பின்பற்ற வேண்டியதில்லை. கூட்டுறவு சங்கங்கள் தங்களிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் யார் யார் கடன் வாங்கியுள்ளார் என்று பார்த்து, அவர்களது பட்டியலை தயார் செய்து விவசாயிகளின் வீடுகளுக்கே, நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீசில், நீங்கள் எங்களிடம் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவிக்கப் பட்டிருக்கும். இந்த அறிவிப்பை விவசாயிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், இது ஒரு ஆவணமாக பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-oneindiatamil
No comments:
Post a Comment